புதுடெல்லி: முன்னாள் நீதிபதி கைது… நடிகையும் மாடலுமான ட்விஷா சர்மா உயிரிழந்த வழக்கில் அவரது மாமியாரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது.
மே 12-ம் தேதி போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் ட்விஷா சர்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மே 15-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதேநாளில் கிரிபாலா சிங்குக்கு விசாரணை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஆனால் ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கிரிபாலா சிங்குக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தேவநாராயண் மிஸ்ரா, “விசாரணைக்கு அவர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவர்மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று குறிப்பிட்டார். இதையடுத்து சிபிஐ அவரை கைது செய்தது.
சிபிஐ எஃப்ஐஆரில், திருமணத்தின் போது ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்தியதாகவும், திருமணத்திற்கு பிறகு ட்விஷாவுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், ட்விஷாவின் அடிப்படை தேவைகளுக்குக் கூட பணம் வழங்காமல், அவரது பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.