புதுடில்லி: புதிய திட்டம்… பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வாகன இன்ஜினுக்கு ஏற்ற எத்தனால் கலப்பு பெட்ரோலை நேரடியாக தேர்வு செய்து நிரப்பிக்கொள்ளலாம்.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா மாற்று எரிபொருள் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் 1,100 கோடி லிட்டர் எத்தனால் தேவைப்படுகிறது. ஆனால் நாட்டின் உற்பத்தி 2,000 கோடி லிட்டராக உயர்ந்துள்ளதால், கூடுதல் உற்பத்தியை பயன்படுத்த அரசு புதிய திட்டத்தை கொண்டு வருகிறது.
இதன்படி, இ-22, இ-25, இ-30 போன்ற பல்வேறு சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோல்கள் அறிமுகமாக உள்ளன.
இந்த பெட்ரோல் வகைகளை தனித்தனியாக விற்பனை செய்ய பெட்ரோல் நிலையங்களில் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு பெட்ரோல் வகைக்கும் தனி விலை நிர்ணயிக்கப்படும். வாடிக்கையாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் மற்றும் விலைகள் பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்தப்படும்.
மேலும், கூடுதல் எத்தனால் கலப்பால் வாகன மைலேஜ் குறையும் என்ற கருத்தை மத்திய அரசு மறுத்துள்ளது. மாறாக, இது வாகன செயல்திறனை மேம்படுத்தும் என விளக்கம் அளித்துள்ளது.