சென்னை: கணவனும்- மனைவியும் தங்களுக்குள் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. அவர்களுக்குள் முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் விவாதம் பின்பு கடுமையானதாக மாறி அவர்களுக்குள் பிரிவை உருவாக்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது. கடுமையான விவாதங்களைப் பற்றியும், அதனால் உருவாகும் பின்விளைவுகள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
விவாதம் எல்லைமீறினால் குடும்ப ரகசியம் காற்றில் பறக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். அதனால் குடும்ப வாழ்க்கையில் விவாதத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தேவையற்ற விவாதங்கள் சின்ன விஷயங்களைகூட பெரிதாக்கி திசை திருப்பிவிட்டுவிடும். விவாதம் கடுமையாகும்போது கோபம் தோன்றும். அது தேவையற்ற வார்த்தை பிரயோகத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய வார்த்தைகள் தம்பதிகளிடையே ஆறாத வடுவை உருவாக்கிவிடும்.
தம்பதிகளில் சிலர் விவாதத்தை தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் சக்தியாக கருதுகிறார்கள். ஆனால் அது ஒரு கத்தியைப் போன்றது. வீண் சண்டையை வளர்த்து மனவருத்தத்தை உருவாக்கிவிடும். இணையிடம் முக்கியமான விஷயம் குறித்து பேச நினைப்பவர்கள், முதலில் அதற்கான சூழ்நிலைக்காக காத்திருக்கவேண்டும். எரிச்சலான மனநிலையில் இருக்கும்போது ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை பெரும்பாலும் மோதலில் தான் முடியும்.
ஒருவர் எரிச்சலாக பேசினாலும் அவர் பேசுவதை முழுமையாக காதுகொடுத்து கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற மனநிலைக்கு அவர் வருவார். தம்பதிகள் தங்கள் வாதத்திறமையை வெளிக்காண்பிக்க நினைக்கக்கூடாது. ஒருவர் கருத்தில் நியாயம் இருந்தால் அதை புரிந்துகொண்டு ஆமோதிக்கவேண்டும். பேச்சுவார்த்தை சுமுகமான முடிவுக்கு வர சாத்தியமில்லை என்பதை உணர்ந்தால் உடனே பேச்சை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
பேச்சு, விவாதமாகிவிட்டால் வார்த்தைகளில் மிகுந்த கவனம்காட்டுங்கள். விவாதத்தை தேவையில்லாமல் வளரவிடாதீர்கள்.உங்கள் கருத்தையும், அதில் இருக்கும் நியாயத்தையும் உங்கள் இணை புரிந்துகொள்ளாதபோது கொஞ்சம் அமைதி காப்பதே சிறந்தது.