மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான அஜித் பவார் தலைமையிலான என்சிபி மற்றும் சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டே பிரிவு ஆகியவை வக்ஃப் வாரிய மசோதா குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன. என்சிபி தலைவர் அஜித் பவார் முஸ்லிம்களுக்கு எந்த அநீதியையும் அனுமதிக்காது என்றும், மசோதா தொடர்பாக முஸ்லிம்களின் கவலைகளை கேட்போம் என்றும் கூறியுள்ளார்.
அஜித் பவார், துலேயில் தனது கட்சியின் ஜன் சன்மான் யாத்திரையில் பேசும்போது, “இந்த மசோதா தொடர்பாக உங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஏதேனும் கவலைகள் இருந்தால், உங்கள் கவலைகளை நாங்கள் கேட்போம். சிறுபான்மையினருக்கு எந்த அநீதியும் நடக்க அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
மேலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் எம்பி சந்தீபன் பும்ரே, வக்ஃப் சட்டத்தில் ஏதேனும் திருத்தம் செய்வதற்கு முன் ஒருமித்த கருத்து மற்றும் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு வக்ஃப் (திருத்தம்) மசோதாவை இந்த மாத தொடக்கத்தில் கொண்டு வந்தது, இது வக்ஃப் வாரியங்களுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான திருத்தங்களை முன்மொழிகிறது. மசோதா, முஸ்லீம் பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் மாற்றங்களை முன்மொழிகிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் இந்த மசோதா முஸ்லிம்களை குறிவைக்கும் முயற்சி என விமர்சிக்கின்றன.
அஜித் பவார், தனது கட்சி எவ்வளவாக விலை கொடுத்தாலும், அதன் சித்தாந்தங்களை கைவிடாது என்றும், சிறுபான்மையினரின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் என்றும் கூறியுள்ளார்.