சென்னை: நடிகை பூர்ணா, ‘ஜெயிலர் 2’ படத்தில் இடம்பெறும் ‘அல்ல பொலேலோ’ பாடலுக்கு நடனமாடியபோது தான் கர்ப்பமாக இருந்தது தெரியாது என தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் இடம்பெறும் ‘அல்ல பொலேலோ’ பாடலுக்கு பூர்ணா நடனமாடியுள்ளார்.
அவர் நடனமாடிய விதத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா நடனமாடிய அளவுக்கு இந்த பாடல் இல்லை என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்ப்பமாக இருந்தது தெரியாமலேயே நடனம்
இந்த நிலையில், ‘அல்ல பொலேலோ’ பாடலுக்கான படப்பிடிப்பின்போது தான் கர்ப்பமாக இருந்ததாக பூர்ணா தெரிவித்துள்ளார்.
இந்த பாடலுக்கான படப்பிடிப்பு 6 நாட்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ‘ஜெயிலர் 2’ படத்தின் நடனக் காட்சிகளை முடித்த மறுநாளே பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அகண்டா 2’ படத்தின் படப்பிடிப்பில் பூர்ணா கலந்து கொண்டுள்ளார்.
அந்த படப்பிடிப்பை முடித்த மறுநாள்தான் தான் கர்ப்பமாக இருப்பது பூர்ணாவுக்கு தெரிய வந்துள்ளது.
மீண்டும் பரிசோதனை
‘அல்ல பொலேலோ’ பாடலுக்கு நடனமாடியபோது தான் கர்ப்பமாக இருப்பது குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என பூர்ணா தெரிவித்துள்ளார்.
கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பிறகு ‘ஜெயிலர் 2’ படக்குழுவினர் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி அப்படி நடனமாடினீர்கள் என்று படக்குழுவினர் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா தனது தாயிடம் தெரிவித்தபோதும், முதலில் அவர் அதை நம்பவில்லையாம்.
“கர்ப்பமாக இருந்தால் இவ்வளவு ஹெவியாக டான்ஸ் ஆட முடியாது. நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பில்லை” என அவரது தாய் கூறியுள்ளார். இதையடுத்து மீண்டும் பரிசோதனை செய்தபோது கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘ஜெயிலர் பேபி’
பூர்ணா தனது மகளுக்கு ‘துஆ ஜமீலா’ என பெயர் வைத்துள்ளார். இருப்பினும் செல்லமாக அந்த குழந்தையை ‘ஜெயிலர் பேபி’ என்று அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துபாயைச் சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட பூர்ணாவுக்கு ஏற்கனவே ஹம்தான் ஆசிப் அலி என்ற மகன் உள்ளார். தற்போது அவர் இரண்டாவது குழந்தையான துஆவுக்கு தாயாகியுள்ளார்.
பூர்ணா கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே ‘அல்ல பொலேலோ’ பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
