கார்டூம்: சூடானின் மேற்கு கோர்டோபான் மாகாணத்தில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பல சிறிய அளவிலான மற்றும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேற்கு கோர்டோபான் மாகாணத்தில் உள்ள எல்-நஹூத் நகருக்கு அருகே அல்-சரா என்ற தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. இங்கு தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இதில் குறைந்தது 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்க விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக்குழுவினர் தொடர்ந்து சென்று, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வருகிறது.
