சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, படம் ஒரு ஜாலியான சாகசப் பயணமாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.
தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார்.
பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை கேத்ரின் தெரசா சிறப்பு தோற்றத்தில் பாடல் ஒன்றில் இடம்பெற்றுள்ளார்.
ராஜமவுலி பாராட்டு
ஆக்ஷன், சாகசம், நகைச்சுவை ஆகிய அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் ராஜமவுலியிடம் திரையிட்டுக் காட்டினர். அதைப் பார்த்த அவர், ‘சிக்மா’ தன்னை கவர்ந்ததாக தெரிவித்தார்.
படத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஏராளமான சாகசக் காட்சிகளும், ஜென்-ஸி தலைமுறையை கவரும் வகையிலான ஆக்ஷன் காட்சிகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பல திறமையான நடிகர்கள் இணைந்து இந்த சாகசப் பயணத்தை உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டினார்.
அக்டோபர் 2-ல் வெளியீடு
ஜேசன் சஞ்சயின் முதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சிக்மா’ அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டிரெய்லர் வெளியான நிலையில், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
