நடிகர் தனுஷ் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் அணிந்திருந்த கடிகாரத்தின் விலை குறித்த தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷுடன் நடிகர்கள் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் தனுஷின் உடை அலங்காரமும் தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக அவரது கையில் இருந்த வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கின.
அந்தக் கடிகாரம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வான்கார்ட் நிறுவனத்தின் ‘ஆர்ப் ஃப்ளையிங் டூர்பில்லன்’ என்ற மாடல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்றும், இந்திய மதிப்பில் ரூ.2.2 கோடி அளவுக்கு இருக்கும் என்றும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 18 கேரட் ரோஸ் கோல்டு மற்றும் நீல நிற செராமிக் பொருட்களால் இந்தக் கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்சின் மற்றொரு சிறப்பம்சம் உலகம் முழுவதும் வெறும் 25 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது என்பதாகும். இதனால் அதன் அரிதான தன்மையும் விலையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவைத் தாண்டி தனுஷின் ஆடம்பரக் கடிகாரம் தற்போது இணையத்தில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
