தமிழகத் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியான முதல் ஏழு நாட்களுக்கு தினமும் ஆறு காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தத் தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது. காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பது திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதற்கு முன்பு முதல் காட்சி பொதுவாக காலை 9 மணியளவில் தொடங்கும் நடைமுறை இருந்து வந்தது. இதனால் அண்டை மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் நடைபெறும்போது, அங்கு கிடைக்கும் ரசிகர்களின் முதல் நாள் கருத்துகள் தமிழகத் திரைப்படங்களின் வரவேற்பைப் பாதிக்கக்கூடும் என்ற கவலை தயாரிப்பாளர்களிடம் இருந்து வந்தது.
இந்த நிலையில், புதிய அரசின் அனுமதியின்படி புதிய திரைப்படங்கள் வெளியான முதல் ஏழு நாட்களுக்கு காலை 6 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை தினமும் அதிகபட்சம் ஆறு காட்சிகள் நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு, உள்ளூர் திருவிழா நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களுக்கும் இந்த அனுமதி பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பாராட்டு விழா நடத்துவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது. சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான திட்டத்தைப் பரிசீலித்து வருகின்றனர். முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்த பிறகு விழா நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய படங்களுக்கும் திரையரங்க வாய்ப்பு அதிகரிக்கும் எனத் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
