சென்னை: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி வேலை, ஓய்வூதிய மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறைகளும் வருவதால், கிளை வங்கிச் சேவைகள் தொடர்ந்து 5 நாட்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் நீண்டகாலமாக வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதனுடன் ஓய்வூதியத்தை மேம்படுத்துதல், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி கணக்கீட்டில் ஒரே மாதிரியான நடைமுறை உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாள் வேலைநிறுத்தம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. சமரசப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த முடிவை எட்டாததைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்
செப்டம்பர் 26, 27 ஆகியவை சனி, ஞாயிறு விடுமுறைகள் என்பதால், செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாட்கள் வங்கிக் கிளை சேவைகள் பாதிக்கப்படலாம்.
இதனால் காசோலை பரிவர்த்தனை, கிளை சார்ந்த பணிகள் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு சில வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. ஏடிஎம், இணையவங்கி, மொபைல் வங்கி, யுபிஐ போன்ற டிஜிட்டல் சேவைகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30-ம் தேதி அரையாண்டு கணக்கு முடிப்பு நாளாக இருப்பதால், இந்த வேலைநிறுத்தம் வங்கி செயல்பாடுகளில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
