புதுடில்லி: அக்டோபர் 1, 2026 முதல் மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடித்துள்ள நுகர்வோர் மீண்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தேவையில்லை. அவர்களுக்கான சிலிண்டர் முன்பதிவு வழக்கம்போல் தொடரும்.
சரிபார்ப்பை இன்னும் முடிக்காதவர்கள், அக்டோபர் 1 முதல் மானியம் பொருந்தும் கட்டுப்படுத்தப்பட்ட சில்லறை விலையில் சிலிண்டர் பெறுவதற்கு முன்பு பயோமெட்ரிக் சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும். சரிபார்ப்பு முடிந்த பிறகே மானியத்துடன் கூடிய முன்பதிவு செயல்படுத்தப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயோமெட்ரிக் சரிபார்ப்பை எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்தில் மேற்கொள்ளலாம். சிலிண்டர் விநியோகிக்கும் நேரத்திலும் டெலிவரி ஊழியர் மூலம் சரிபார்ப்பை முடிக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் செயலிகள் மூலமாக வீட்டில் இருந்தபடியே சரிபார்ப்பு செய்யும் வசதியும் உள்ளது.
இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் IndianOil ONE, பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் HelloBPCL, ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் HP PAY செயலிகள் மூலம் சரிபார்ப்பை மேற்கொள்ளலாம்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பை செய்ய விரும்பாத அல்லது அதை முடிக்க முடியாத நுகர்வோருக்கும் எரிவாயு வழங்கப்படும். ஆனால் அவர்கள் சந்தை விலையில், மானியம் இல்லாமல் சிலிண்டரை பெற வேண்டியிருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மானியத்துக்குத் தகுதியான குடும்பங்களுக்கு மட்டுமே அதன் பயன் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், போலி அல்லது தகுதியற்ற இணைப்புகளை கண்டறிந்து நீக்குவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 19, 2026 நிலவரப்படி, 27.43 கோடி வீட்டு எரிவாயு நுகர்வோர், அதாவது 89.9 சதவீதம் பேர், பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை முடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
