சக்லேஷ்பூர்: கர்நாடக மாநிலம் சக்லேஷ்பூரில் சுற்றுலா சென்ற 23 வயது இளம்பெண், சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷா, தனது உறவினர் ரகு மற்றும் நண்பர் தர்ஷன் ஆகியோருடன் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி சக்லேஷ்பூருக்கு சுற்றுலா சென்றார். அங்கு ஒரு விடுதியில் மூவரும் தங்கியிருந்தனர்.
சம்பவத்தன்று குளிப்பதற்காக தயாரான வர்ஷா, முதலில் சாக்லெட் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் குளியலறையை நோக்கிச் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து மயங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரகு மற்றும் தர்ஷன் உள்ளிட்டோர் அவரை உடனடியாக ஹெட்டூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சக்லேஷ்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே வர்ஷா உயிரிழந்தார்.
மரணத்துக்கான காரணம் என்ன?
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் விசாரணையை தொடங்கினர். வர்ஷாவின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் உயிரிழந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவருடன் சுற்றுலா சென்ற ரகு மற்றும் தர்ஷனிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடற்கூறு பரிசோதனை மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்ஷா சக்லேஷ்பூருக்கு சுற்றுலா சென்றிருந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிந்திருந்ததாக கூறப்படுகிறது. திடீரென இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
