சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து திருப்பதிக்கு தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு சேவை செப்டம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, புதுச்சேரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கும், அங்கிருந்து மீண்டும் அந்த நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பக்தர்களின் தேவையைப் பொறுத்து தினமும் மொத்தம் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் முன்கூட்டியே தங்களது பயணத்தை திட்டமிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இந்த கூடுதல் பேருந்து சேவை பயனுள்ளதாக இருக்கும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
