பெருங்களத்தூர்: பெருங்களத்தூரில் ஆட்டோவில் பயணம் செய்த செவிலியரிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சமடைந்த இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து காயமடைந்தார்.
பெருங்களத்தூர் விவேக் நகரைச் சேர்ந்த சத்யா (21), வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பணிக்குச் செல்வதற்காக தனியார் செயலி மூலம் இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளார். சிறிது தூரம் சென்றபோது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சத்யா அங்கிருந்து நடந்து பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கிருந்து பணிக்குச் செல்வதற்காக வந்த ஆட்டோவில் ஏறியுள்ளார்.
ஆட்டோ சிறிது தூரம் சென்றபோது மேலும் 4 பேர் அதில் ஏறியதாக கூறப்படுகிறது. அவர்கள் சத்யாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் அச்சமடைந்துள்ளார்.
ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்தார்
நிலைமை மோசமடைவதை உணர்ந்த சத்யா, ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது இடது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த பீர்க்கங்காரணை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தாம்பரம் உதவி ஆணையர் வைஷ்ணவி மருத்துவமனைக்குச் சென்று சத்யாவிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
ஆட்டோவின் அடையாளம், அதில் பயணம் செய்ததாக கூறப்படும் நபர்கள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். சம்பவத்தின் உண்மை நிலை குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
