ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், மறுநாளே தனது தாயை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது.
பரத்பூர் மாவட்டம் நத்பாய் நகராட்சியின் 6-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட ஜெகதிஷ் பிரசாத் 151 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராம்ஷரன் 150 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜெகதிஷ் பிரசாத் வெற்றி பெற்றார்.
வெற்றியைத் தொடர்ந்து அவரது வீட்டில் கொண்டாட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு துக்கம் நிலவியது. காரணம், தேர்தலில் வாக்களித்த மறுநாளே ஜெகதிஷ் பிரசாத்தின் தாய் உயிரிழந்தார்.
இதனால் தேர்தல் வெற்றியை கொண்டாட முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். தேர்தல் முடிவில் ஒரு வாக்கு கூட எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
குறிப்பாக, அவரது தாயார் தேர்தல் நாளில் வாக்களித்திருந்த நிலையில், மறுநாளே உயிரிழந்தது குடும்பத்தினருக்கு மேலும் உணர்வுப்பூர்வமான சம்பவமாக அமைந்துள்ளது.
ஒருபுறம் வெற்றி; மறுபுறம் தாயை இழந்த சோகம் என ஒரே நேரத்தில் எதிரெதிரான உணர்வுகளை எதிர்கொண்ட ஜெகதிஷ் பிரசாத்தின் கதை, ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் கவனம் பெற்றுள்ளது.
