டொரன்டோ: கனடாவில் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த கனோலா மற்றும் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோதுமை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய நாடாக விளங்கும் கனடாவில், தற்போது பல்வேறு பகுதிகளில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கனோலா எனப்படும் எண்ணெய் வித்துப் பயிர்களும், உயர்தர கோதுமையும் அறுவடைக்குத் தயாராக உள்ளன.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அறுவடை இயந்திரங்களை வயல்களுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய பயிர்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே சில பகுதிகளில் பயிர்கள் மழைநீரில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் நீரில் இருப்பதால் கனோலா மற்றும் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் பயிர்களின் நிறம் மாறியுள்ளதுடன், மழைநீரின் வேகத்தில் பயிர்கள் சாய்ந்து அல்லது அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈரப்பதம் அதிகரிப்பதால் பூஞ்சைத் தொற்று ஏற்படும் அபாயமும் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விளைந்துள்ள பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இன்னும் நம்பிக்கையுடன் விவசாயிகள்
அதே நேரத்தில், நவம்பர் மாதத்தில்தான் சில பகுதிகளில் பனி மற்றும் மண் உறையும் நிலை ஏற்படும் என்பதால், அதற்கு முன்பு அறுவடையை முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையிலும் விவசாயிகள் உள்ளனர்.
மழை குறைந்து வயல்களில் தண்ணீர் வடிந்தால் மீண்டும் அறுவடைப் பணிகளைத் தொடங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தொடர்ந்து ஈரப்பதம் நிலவினால் பயிர்களின் தரத்திலும் விளைச்சலிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் விவசாயிகள் வானிலை மாற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
