மஷாத்: ஈரானில் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் மஷாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லேண்டிங் கியரில் இருந்த ஒரு டயரின் வெளிப்புற ரப்பர் பகுதி கழன்று விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் விமானத்தில் இயந்திரக் கோளாறு தொடர்பான அவசரநிலை ஏற்பட்டதாக விமானி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் விமானம் கடுமையாக அதிர்ந்ததாக கூறப்படுகிறது. அதிர்வின் காரணமாக பயணிகள் அமர்ந்திருந்த கேபின் பகுதியில் மேற்கூரையின் உட்புற பாகங்கள் சில கழன்று விழுந்தன. மேல்பகுதியில் இருந்த பொருட்களும் கீழே விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விமானம் கடுமையாக குலுங்கியபோது பயணிகள் அலறுவதும், சிலர் பிரார்த்தனை செய்வதும் காட்சிகளில் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்
விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்துக்கு திருப்பினர். அங்கு விமானம் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. பின்னர் பயணிகள் மாற்று விமானம் மூலம் கெர்மான்ஷாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானம் தரையிறங்கிய பின்னர் மஷாத் விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விமான நிலைய செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
டயர் தொடர்பான கோளாறுக்கும் விமானத்தில் ஏற்பட்ட அதிர்வுக்கும், கேபின் பாகங்கள் கழன்று விழுந்ததற்கும் இடையிலான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
