கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் சக மாணவிக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி, அவரது கையில் கற்பூரத்தை ஏற்றி துடைப்பத்தால் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். கல்லூரி விடுதியில் கடலூர் மற்றும் விருத்தாசலத்தைச் சேர்ந்த தலா ஒரு மாணவி, வாணாபுரத்தைச் சேர்ந்த மேலும் இரு மாணவிகள் என 5 பேர் ஒரே அறையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறிப்பிட்ட மாணவியின் நடவடிக்கையில் சக மாணவிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, சக மாணவிகள் சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி வைத்ததாகவும், துடைப்பத்தால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் மாணவிக்கு தீக்காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம், மாணவிகளிடம் விசாரணை நடத்தியதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய 4 மாணவிகளை கல்லூரியில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு சம்பவம் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தங்கள் மகளை சக மாணவிகள் தாக்கியதாக அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
புகாரை பெற்ற போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதி அறையில் நடந்ததாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணி, மாணவிகள் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
