சென்னை: ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாநகரப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த சீனிவாசன் (45), சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ராஜ கணபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து இரவில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலம் வெங்கடேஸ்வரா நகரின் 13-வது தெரு வழியாக சென்றபோது, ஒரு கட்டத்தில் பாதியிலேயே திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஊர்வலத்தை எதிர்பார்த்து காத்திருந்த சிலர் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து விழாக்குழுவினரிடம் அவர்கள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
அப்போது விழாக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
தகவலறிந்து வந்த ராமாபுரம் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், எதிர்தரப்பைச் சேர்ந்த சிலர் விழாக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சீனிவாசன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் சீனிவாசனின் மார்பில் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐ.டி. நிறுவன ஊழியர் ஆனந்த் உள்ளிட்ட 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
