புதுடெல்லி: ஆன்லைன் வர்த்தக தளங்கள் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட், பிளிப்கார்ட் இந்தியா, ஜெப்டோ ஆகிய 5 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றின் தரம், லேபிள், விளம்பரக் கூற்றுகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதி உள்ளிட்டவற்றை உறுதி செய்வதற்காக எஃப்எஸ்எஸ்ஏஐ தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஐந்து முக்கிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை, விதிமுறைகளுக்கு முரணான பொருட்கள் மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்லைன் மளிகைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டவையா என்பதை உறுதி செய்வது முக்கியமாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் ஒரு குழந்தை உணவுப் பொருளில் தரக்குறைவு இருப்பதாகக் கண்டறிந்து எஃப்எஸ்எஸ்ஏஐ சட்ட நடவடிக்கை தொடங்கியிருந்தது. அந்த நடவடிக்கையும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பரந்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைந்தது.
ஆன்லைன் தளங்கள் மீது தொடங்கப்பட்டுள்ள தற்போதைய நடவடிக்கையின் அடுத்தகட்டத்தில் என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக அதிகாரிகளின் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் தொடர உள்ளன.
