ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றக் கொள்கையில் புதிய திருப்பமாக, புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்களைத் தங்கவைத்து அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கான மையத்தை ருவாண்டாவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், கிரீஸ், நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளன.
இந்த மையத்தில் சுமார் 100 பேர் வரை தங்கவைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டும் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத அல்லது விரும்பாத வயது வந்த குடியேறிகளுக்கு இங்கு தங்குமிடம், கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்புக்கான உதவிகள் வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் முடித்து, அதற்குப் பிறகு மையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்ற விதிமுறைகளின் அடிப்படையில் மூன்றாவது நாட்டில் இதுபோன்ற மையங்களை அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியேறிகளின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பாகக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. எனவே, ஐரோப்பிய நாடுகளின் இந்த முயற்சி நடைமுறையில் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
