தைவான் தொடர்பான சர்வதேச அரசியல் மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தைவான் அதிபர் லாய் சிங்-தே பயணம் மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட விமான அனுமதிகளை மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகள் ரத்து செய்த விவகாரத்தில், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தலையிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தைவான் அதிபர் எஸ்வாட்டினி நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தபோது, சில நாடுகளின் விமானப் போக்குவரத்து அனுமதிகள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச கடல் பகுதிகளுக்கு மேலான விமானத் தகவல் மண்டலங்களை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது.
இதுதொடர்பாக மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், சர்வதேச விமானப் போக்குவரத்து விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தைவான் தனி அரசியல் அடையாளத்துடன் செயல்பட்டு வரும் நிலையில், அது சீனாவின் ஒருபகுதி என்பதே சீன அரசின் நிலைப்பாடாக உள்ளது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில் விமானப் போக்குவரத்து அனுமதி விவகாரம் இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
