சென்னை: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் நான்காவது பாடலான ‘சுலோச்சனா’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ வெளியானது முதலே ரசிகர்களிடம் கவனம் பெற்றது. தொடர்ந்து ‘அய்யய்யோ அம்மாடி’ மற்றும் ‘ரேஜ் ஆப் சிக்மா’ ஆகிய பாடல்களும் வெளியாகின.
இந்த நிலையில், படத்தின் நான்காவது பாடலாக ‘சுலோச்சனா’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சூப்பர் சுப்பு வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சான்வி சுதீப் பாடியுள்ளார். பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார்.
மேலும், இந்தப் பாடலில் நடிகை கேத்ரின் தெரசா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடியுள்ளார். இதனால் பாடல் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருக்கு ஜேசன் சஞ்சய் நன்றி தெரிவித்தபோது, அரங்கில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
தற்போது அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி வருவதால், ‘சிக்மா’ படத்தின் இசை தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அக்டோபர் 2-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
