புதுடெல்லி: ரெயில் பயணத்தின்போது உயிரிழந்தவரிடம் பயணச்சீட்டு கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரது குடும்பத்தினரின் இழப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த மகேஷ்பாய் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ரெயிலில் சூரத் நோக்கி பயணம் செய்தார். சபர்மதி–அகமதாபாத் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் திடீரென அதிர்ந்ததில், பொதுப்பெட்டியின் அருகே இருந்த அவர் கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது பெற்றோர் ரெயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். தீர்ப்பாயம் ரூ.8 லட்சம் இழப்பீடு மற்றும் 9 சதவீத வட்டி வழங்க உத்தரவிட்டது.
ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பயணச்சீட்டு கிடைக்கவில்லை என்பதையும், ரெயிலில் இருந்து அவர் விழுந்ததற்கான போதிய ஆதாரம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது.
உச்சநீதிமன்றம் முக்கிய விளக்கம்
இதனை எதிர்த்து மகேஷ்பாயின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
நீதிபதிகள் உஜ்ஜல் புயான், அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
ரெயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்பதாலேயே அந்த நபர் சட்டவிரோதமாக பயணம் செய்தார் என்று முடிவு செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ரெயில்வே சார்பில் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சம்பவத்துக்கு சுமார் 7 மாதங்கள் கழித்து தயாரிக்கப்பட்டதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்த தாமதத்துக்கு ரெயில்வே தரப்பில் போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.
இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் வழங்கிய ரூ.8 லட்சம் இழப்பீட்டை மீண்டும் உறுதி செய்தது. மேலும் 30 நாட்களுக்குள் இழப்பீட்டை வழங்க ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
