சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மற்றும் சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் குறித்து அவதூறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மூத்த நடிகை லதாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நாடகத் துறையை சேர்ந்த 5 சிறந்த கலைஞர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
நடிகர் சங்க கட்டிடப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக துணைத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார். நடப்பாண்டு இறுதிக்குள் கட்டிடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் வருவதாக உறுதியளித்துள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்தார். அதிகாரப்பூர்வ தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டது.
மேலும், சமூக வலைதளங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை 9 யூடியூப் சேனல்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருணாஸ் தெரிவித்தார்.
