தென் கொரியாவில் தேசிய அளவிலான வரித் தணிக்கையாளர் தேர்வில் முதலிடம் பிடித்த நபர், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு அறைக்குள் ரகசியமாக எடுத்துச் சென்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி வினாக்களைப் புகைப்படம் எடுத்து, அவற்றை செயற்கை நுண்ணறிவுக் கருவிக்கு அனுப்பி விடைகளைப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்வில் சிறிய கேமரா மூலம் வினாக்களைப் படம் பிடித்து, பின்னர் ஸ்மார்ட்போன் வழியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதன்மூலம் கிடைத்த பதில்களைப் பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் அவர் பெற்றிருந்த மிக உயர்ந்த மதிப்பெண்கள் ஏற்கனவே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன.
இந்தச் சம்பவம் தென் கொரியாவில் தேர்வு முறையின் நம்பகத்தன்மை மற்றும் கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கடுமையான போட்டி நிலவும் தேசியத் தேர்வுகளில் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் நேர்மையாகத் தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தை தென் கொரிய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. தேசிய அளவிலான பிற தகுதித் தேர்வுகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை நடைபெறவுள்ள கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு முன்னதாக பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் தேர்வு முறைகளையும் அதற்கேற்ப மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
