சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த திரைப்படம் கைவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு இருவரும் தங்களது பதிவுகள் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
வெங்கட் பிரபுவின் தந்தையும், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தனது மகனின் படத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த கால்ஷீட் வீணானதாகவும், இதனால் படம் தாமதமானதாகவும் பெயர் குறிப்பிடாமல் ஒரு முன்னணி நடிகர் குறித்து கூறியிருந்தார்.
வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருந்ததால், கங்கை அமரன் குறிப்பிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்தான் என சமூக வலைதளங்களில் பலரும் யூகங்களை வெளியிட்டனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்தார்.
“எந்த மனக்கசப்பும் இல்லை”
“எஸ்.கே. எனக்கு எப்போதும் நெருங்கிய நண்பர், சகோதரர் போன்றவர். ஒரு தந்தையாக தனது மகன் சம்பந்தப்பட்ட திரைப்படம் தாமதமாகும்போது ஏற்படும் விரக்தி இயல்பானது. அவருக்கு முழு விவரங்களும் தெரிந்திருக்காமல் இருக்கலாம். அதற்காக அவரைக் குறை சொல்ல முடியாது.
எனது தொழில்முறை விஷயங்களை யாரிடமும் விரிவாக பேசுவதில்லை. பல்வேறு காரணங்களால் அந்த திரைப்படம் தொடங்காமல் போனது. அவ்வளவுதான். இதில் எந்த மனக்கசப்பும் இல்லை. சரியான நேரமும் நல்ல திரைக்கதையும் அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என வெங்கட் பிரபு குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “சார், நாம் ஒரு குடும்பம். இதற்கெல்லாம் நீங்கள் இவ்வளவு சீரியஸாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நான் எப்போதும் வெங்கட் பிரபுவின் ரசிகராகவே இருப்பேன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சென்னை 28, மங்காத்தா, மாநாடு, கோட் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் பிரபுவின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
