புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தேர்தல் ஆணையத்தின் பெயரில் முடிவுகளை எடுத்ததாகக் கூறப்படும் விவகாரம் உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை மற்றும் சுயாதீன விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உள் செயல்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பல்வேறு முடிவுகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 சந்தர்ப்பங்களில் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாக அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
படிவம்-6 விவகாரம்
புதிய வாக்காளர்கள் பெயரை சேர்ப்பதற்கான படிவம்-6-ல் எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் இரு தேர்தல் ஆணையர்களும் சட்டரீதியான கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
அதேநேரம், தேர்தல் ஆணையத்தின் தரப்பில் படிவம்-6 மாற்றப்படவில்லை என்றும், எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூடுதல் இணைப்பு மட்டுமே இடம்பெற்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 26-ம் தேதி மூன்று தேர்தல் ஆணையர்களும் பங்கேற்ற கூட்டத்துக்குப் பின்னர் பல்வேறு விவகாரங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தேர்தல் ஆணையத்தின் கூட்டு முடிவெடுக்கும் நடைமுறை தொடர்பாக நீதிமன்றம் தலையிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல், எஸ்.ஐ.ஆர்., தேர்தல் தரவுத்தளங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தொடர்பான மேற்கு வங்க வழக்குகளில் 16.10 லட்சம் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
