ஐதராபாத்; நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தில் நடிகர் அசோக் செல்வன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகார்ஜுனா தனது திரைப்பயணத்தில் 100-வது படத்தை எட்டியுள்ளார். ‘விக்ரம்’ திரைப்படம் மூலம் 1986-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான அவர், தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அவரது 100-வது படத்தை தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குகிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘கிங் 100’ என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகார்ஜுனாவுடன் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அசோக் செல்வன் இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு எதிரான முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்துடன் தொடர்புடைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியான தகவலின்படி, அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.
