சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘சென்னை 28’ திரைப்படத்தின் 3-ம் பாகத்துக்கான பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2007-ம் ஆண்டு வெளியான ‘சென்னை 600028’ திரைப்படம் கிரிக்கெட், நட்பு மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம், வெங்கட் பிரபுவின் இயக்குநர் பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக 2016-ம் ஆண்டு ‘சென்னை 28 II’ வெளியானது. முதல் பாகத்தின் கதாபாத்திரங்களின் அடுத்தகட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்த அந்தப் படமும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக படக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் பிரத்யேக அரங்கம் அமைத்து அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சுமார் 10 நாட்கள் நடைபெற இருப்பதாகவும், அதன்பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தி பாய்ஸ் ஆர் பேக்’ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் பழைய கூட்டணி திரும்ப உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ‘சென்னை 28’ ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
