சென்னை: அருள் நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படம் விரைவில் திரைக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத் தொடரின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
செப்டம்பர் 10-ம் தேதி படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது அக்டோபர் 1-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே இப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் விஜய சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தை இணைத் தயாரிப்பாளராக தயாரித்தபோது, எதிர்காலத்தில் ‘டிமான்ட்டி காலனி’ பெயரில் உருவாகும் அடுத்தடுத்த பாகங்களையும் இணைந்து தயாரிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தனது அனுமதியின்றி மூன்றாம் பாகத்தை தயாரித்து ஓடிடி உரிமையை விற்பனை செய்ததாகவும், திரையரங்க வெளியீட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பதில் கோரி, அதுவரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்திருந்தது. தற்போது அந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் படத்தின் அடுத்தகட்ட வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
