வடகொரியா தனது அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. யோங்பியான் அணுசக்தி வளாகத்தில் புதிய கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரஃபேல் குரோஸி, வடகொரியாவின் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். யோங்பியான் வளாகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் செறிவூட்டல் வசதிகளுடன் புதிய வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுதங்களின் மையப்பகுதியை உருவாக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் ஆகிய இரு பொருட்களின் உற்பத்தியையும் வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டின் அணு ஆயுதத் திறன் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வடகொரியா கடந்த 2009-ம் ஆண்டு சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றியது. அதன் பின்னர் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ள முடியாத நிலையில், செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் வடகொரியாவின் அணுசக்தி நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
