சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாக கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.டி. அரசகுமாருக்கு ஜாமின் வழங்கி சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 28-ம் தேதி ரத்து செய்தது.
இதையடுத்து ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றம், அரசகுமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக் கூடாது, தலைமறைவாகக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளன.
