சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதையடுத்து ஜூலை மாதம் நடைபெற்ற சிறப்பு டெட் தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வழி ஏற்பட்டுள்ளது.
டெட் தேர்வில் ஏற்பட்ட சர்ச்சை
ஆசிரியர் பணியில் தொடர்வது மற்றும் பதவி உயர்வு பெறுவது தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு முக்கியமானதாக மாறியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளைத் தொடர்ந்து, பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது. தேர்வு கடினமாக இருந்ததாகக் கூறிய ஆசிரியர்கள், தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
60 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க கோரிக்கை
பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனக் கோரி ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் கொள்கை முடிவு குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கியதுடன், அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
தடை நீக்கம்
இந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பதால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி பள்ளிக்கல்வித் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் இடைக்கால கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படாததைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த எதிர்பார்ப்புக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது.
