சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘#Love’ வெப் தொடர் அக்டோபர் 2-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்த தொடரை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.
காதல் கதையில் புதிய கூட்டணி
காதல் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ள சவுந்தர்யா ரஜினிகாந்த், அதனால்தான் காதலை மையமாகக் கொண்ட படைப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருவதாக கூறியுள்ளார்.

அர்ஜூன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரையும் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்தபோது, கதைக்கு தேவையான நல்ல கெமிஸ்ட்ரி இருவரிடமும் இருப்பதை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் இரண்டு வெவ்வேறு தலைமுறைகளின் காதல் பார்வைகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சவுந்தர்யா குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகை!
நடிகை ஐஸ்வர்யா ராயை தான் தீவிரமாக ரசிப்பதாக தெரிவித்துள்ள சவுந்தர்யா, அவரிடமே நேரடியாக தான் ரசிகை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தந்தை ரஜினிகாந்தின் சுயசரிதையை முதலில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அதன்பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக உருவாக்கும் எண்ணம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தந்தையின் வாழ்க்கையை பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற முக்கியமான படைப்புகளுடன் ஒப்பிட்டு பேசிய சவுந்தர்யா, அதனை அவசரமாக திரைக்கு கொண்டு வராமல் உரிய நேரத்தில் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘ஜெயிலர் 2’ படத்திற்காக தனது தந்தை முன்பைவிட அதிக உழைப்பை செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
