சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இறுதிப் பக்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் தொடர்ச்சிப் பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய மனோ வெ. கண்ணதாசனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ், குமார சம்பவம் தொடர்களின் மூலம் அறியப்படும் குமரன் தங்கராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன், அபிஷேக் ஜோசப், சத்யா ஆகியோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். மர்மம், விசாரணை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த உணர்ச்சிகரமான திரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.
படத்தின் மையக் கதையில் ஒரு கொலை நடைபெறுகிறது. கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்க, குற்றம் வெளியில் தெரியாமல் மறைக்க மற்றொரு தரப்பினர் போராடுகின்றனர். இந்த இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் மோதலே கதையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.
