இந்தியாவில் சமூக வலைதளப் பதிவுகளை தானியங்கி முறையில் முடக்கும் நடைமுறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மெட்டா நிறுவனத்தையும் மத்திய அரசையும் எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ராகுல் காந்தியின் புகைப்படம் இடம்பெற்ற வாழ்த்து செய்திகள் உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் முடக்கப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் காலத்தில் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை பாதிக்கப்படுவதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.
நவம்பர் 25ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மெட்டாவின் தானியங்கி உள்ளடக்க நீக்க முறை சட்டப்பூர்வமான அரசியல் வெளிப்பாடுகளையும் பாதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ராகுல் காந்தியின் புகைப்படம் இடம்பெற்ற பிறந்தநாள் வாழ்த்துகள், நினைவஞ்சலிகள் மற்றும் திருமண அழைப்பிதழ் போன்ற பதிவுகளும் முடக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்குப் பின்னணியில் பிப்ரவரி மாதம் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள் உள்ளன. நீதிமன்ற உத்தரவு அல்லது அரசின் எழுத்துப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் ஏற்கெனவே நீக்கப்பட்ட உள்ளடக்கங்களின் அப்படியே உள்ள நகல்களைக் கண்டறிந்து தடுக்க பெரிய சமூக வலைதள நிறுவனங்கள் தானியங்கி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த விதிகள் வலியுறுத்துகின்றன.
மெட்டா நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் 54 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை சுமார் 70 ஆயிரமாக இருந்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சட்ட விதிகளுக்கு இணங்கவே உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக மெட்டா கூறியுள்ளது.
இந்த வழக்கின் மூலம் தானியங்கி பதிவுத் தடுப்பு உத்தரவை ரத்து செய்யவும், முடக்கப்பட்ட பதிவுகளை மீட்டெடுக்கவும், எந்த அடிப்படையில் பதிவுகள் தடுக்கப்படுகின்றன என்ற விவரங்களை வெளியிடவும் காங்கிரஸ் கோரியுள்ளது. மறுபுறம் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைத் தடுக்கவே இந்த விதிகள் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசின் நிலைப்பாடு உள்ளது. வழக்கின் விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
