திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அங்கு செல்ல முயன்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போலீசாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் மோதலை அதிகரித்துள்ளது. தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை நேரில் பார்ப்பதற்காக அவர் திருப்பரங்குன்றம் செல்லத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர் வெளியே செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
இந்த நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் ஆளும் தவெக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கவில்லை என்றும், வீட்டுக்காவல் நடவடிக்கை கடுமையான அரசியல் அடக்குமுறையை நினைவூட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ஏற்கெனவே தமிழக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநில பாஜக தலைவரை வீட்டுக்காவலில் வைத்த சம்பவம் அதிமுகவையும் விமர்சனக் களத்தில் இறக்கியுள்ளது. இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
