காசா பகுதியில் போர் பாதிப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பாலஸ்தீன மக்கள் தற்போது குளிர்கால மழையால் மேலும் கடுமையான துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான தற்காலிகக் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அடிப்படை நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
காசா பகுதியில் போர் காரணமாக வீடுகளை இழந்த ஏராளமான குடும்பங்கள் தற்காலிகக் கூடாரங்களில் வசித்து வருகின்றன. மழைநீர் தேங்கியதால் பல கூடாரங்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் குளிரையும் ஈரப்பதத்தையும் சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பல இடங்களில் தற்காலிக குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

கூடாரங்கள், போர்வைகள், குளிர்கால ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை காசாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மனிதாபிமான அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இஸ்ரேல் விதித்துள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நிவாரணப் பொருட்கள் செல்வதில் தடையாக இருப்பதாக உதவி அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தாலும் காசா மக்களின் பாதுகாப்பு, உணவு, மருத்துவ வசதி மற்றும் குடியிருப்பு தேவைகள் முழுமையாக நிறைவேறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச்செயலாளர் அமினா முகமது தெரிவித்துள்ளார். குளிர்காலம் தீவிரமடையும் முன்பு அவசர உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கை வலுத்துள்ளது.
