விண்வெளி ஆராய்ச்சியில் சீனா புதிய மைல்கல்லை எட்டத் தயாராகியுள்ளது. அந்நாட்டின் ஷென்சோ 24 விண்கலத்தில் பாகிஸ்தான் விண்வெளி வீரர் முகமது ஜீஷான் அலி பயணம் செய்ய உள்ளார். சீனாவின் விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விண்வெளிப் பயணக் குழுவினர் அறிமுகப்படுத்தப்பட்டனர். முகமது ஜீஷான் அலியுடன் சீன விண்வெளி வீரர்களான டாங் ஹொங்போ மற்றும் வூ யி ஆகியோரும் இந்தப் பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். மூன்று பேர் கொண்ட குழுவாக இந்த விண்வெளிப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
40 வயதான முகமது ஜீஷான் அலி பாகிஸ்தான் விமானப்படையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சீனாவின் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து அவர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.
இந்த விண்கலம் நவம்பர் 25ஆம் தேதி புதன்கிழமை காலை சீனாவின் ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சீன விண்வெளி நிலையத்தில் வெளிநாட்டு வீரர் ஒருவர் பங்கேற்கும் முதல் பயணம் என்பதால் இந்த நிகழ்வு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பிலும் இது புதிய அத்தியாயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
