வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹனோய் நகரில் செயல்பட்டு வந்த ஹாட் பாட் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. எரிவாயு கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வெடிப்பின் தாக்கத்தில் உணவகத்தின் ஜன்னல்கள் உடைந்து சிதறின. அருகிலிருந்த கட்டிடங்களின் சுவர்களிலும் விரிசல்கள் ஏற்பட்டன.
விபத்தில் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் இரும்பு கதவுகள் தூக்கி வீசப்பட்டன. அருகிலிருந்த குடியிருப்புகளும் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற நேரத்தில் உணவகத்தில் அதிகமானோர் இருந்திருக்கலாம் என்பதால் இடிபாடுகளுக்குள் மேலும் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்று மீட்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். அருகிலிருந்த பாதுகாப்பற்ற கட்டிடங்களில் வசித்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். எரிவாயு கசிவே விபத்துக்குக் காரணமா அல்லது வேறு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
