ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தனது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் எஸ்தோனியாவுக்கு எதிராக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. எஸ்தோனியாவின் நடவடிக்கைகள் நேரடிப் போரைத் தூண்டும் நிலையை உருவாக்கக்கூடும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடனான அனைத்து சாலை எல்லைக் கடப்பிடங்களையும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் குறைந்தது ஆறு மாதங்களுக்கு மூட எஸ்தோனியா திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் உளவுத்துறை தொடர்பான சந்தேகங்களைக் காரணமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்தோனியா தெரிவித்துள்ளது. குறிப்பாக ட்ரோன் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ரஷ்ய உளவுத்துறையின் தொடர்பு இருப்பதாக எஸ்தோனியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
மேலும், உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த எஸ்தோனியா அனுமதிப்பதாகவும், ரஷ்ய கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் மாஸ்கோ குற்றம்சாட்டியுள்ளது. இதனை எஸ்தோனியா நிராகரித்துள்ளது. ரஷ்ய மொழி பேசும் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் ரஷ்யா புகார் தெரிவித்துள்ளது.
எஸ்தோனியா நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நேரடிப் போராக மாறினால் அது மிகப்பெரிய சர்வதேச பாதுகாப்புப் பிரச்சினையாக மாறக்கூடும். நேட்டோ அமைப்பு நிலைமையை கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், ஐரோப்பாவின் வடகிழக்கு எல்லையிலும் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
