சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் திரைப்படத்தின் வெளியீட்டுத் திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஓ மை கடவுளே, டிராகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்தை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படம் தொடர்பான புதிய தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் இந்தியன் 3 திரைப்படத்தைப் பொங்கல் பண்டிகைக் காலத்தில் வெளியிடத் திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தர்மன் படத்தை 2027 கோடை விடுமுறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், வெளியீட்டுத் தேதி தொடர்பாக கமல்ஹாசன் ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், வெளியீட்டுத் தேதி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
