வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தற்போதைய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். உக்ரைன் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், போர் தொடர்ந்து நீடிப்பதால் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்வது தொடர்பான அமெரிக்காவின் நடவடிக்கைகளும் சர்வதேச அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள டிரம்பின் அணுகுமுறை, உக்ரைன் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள ஜெலன்ஸ்கி, தனது நாட்டில் நடைபெறும் போருக்கு ரஷ்யாவே காரணம் என்று தெரிவித்துள்ளார். எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தினால், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் தொடர்ந்து நிலவுகிறது.
