சென்னை: சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கூடுதலாக கிருஷ்ணா நதிநீரைத் திறந்துவிட வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்த விஜய், தமிழகத்தின் குடிநீர் தேவைகள் மற்றும் தென் மாநிலங்களின் நீர்வளப் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்களிலும் மொத்தக் கொள்ளளவில் சுமார் 35 சதவீதம் அளவுக்கே தண்ணீர் இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், சென்னையின் குடிநீர் தேவையைச் சமாளிக்க கூடுதல் கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் என்று விஜய் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சந்திரபாபு நாயுடு, நீர் இருப்பு மற்றும் தேவையைப் பொறுத்து கூடுதல் தண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். ஏற்கெனவே சென்னைக்கு 4.08 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்தும் இரு மாநில முதல்வர்களும் ஆலோசித்தனர்.
இந்தத் திட்டம் நீண்டகால நீர்வளப் பாதுகாப்புக்கு உதவக்கூடும் என்பது இரு தரப்பினரின் கருத்தாக உள்ளது.
