பொன்னேரி: சோழவரம் அருகே ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நில ஆக்கிரமிப்புகளை வருவாய் துறை அதிகாரிகள் அகற்றி, இடத்தை மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சோழவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் 14.5 ஏக்கர் கிராம நத்தம் புறப்புக்கு நிலம் உள்ளது.
அந்த நிலத்தை தனியார் சோப்பு நிறுவனம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலம், 2022ல் வருவாய்த்துறையினரால் மீட்கப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தனியார் சோப் நிறுவனம் சம்பந்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து அலுவலகம் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் விடுதியாக கட்டி பயன்படுத்தியது. இதுகுறித்து, கிராம மக்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து பொன்னேரி மாவட்ட ஆட்சியர் மதிவாணன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்பில் நடந்த இப்பணியில், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிரடியாக அகற்றப்பட்டு, அரசுக்கு சொந்தமான ரூ. 150 கோடி மீட்கப்பட்டது.
மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட இந்த நிலம் தொடர்பாக மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், ரவுடி நாகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலால் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை வருவாய்த் துறை அதிகாரிகளும், போலீஸாரும் உறுதிப்படுத்தவில்லை.