தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ மளமளவெனப் பரவியதால் அந்தப் பகுதியில் கரும்புகை வானளாவ எழுந்தது. இதையடுத்து ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாங்காக்கின் ஃப்ரா கானோங் பகுதியில் அமைந்துள்ள பாங்சாக் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நவம்பர் 26ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒன்பது பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆலையின் ஹைட்ரோகிராக்கிங் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் தினசரி எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 1.20 லட்சம் பேரல்கள் ஆகும். விபத்தைத் தொடர்ந்து ஆலையின் அனைத்து உற்பத்திப் பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய தீ விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் காற்றின் தரம் பரிசோதிக்கப்பட்டது. காற்றின் தரம் இயல்பான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஆலை மீண்டும் எப்போது செயல்படத் தொடங்கும் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
