ஸ்பெயினின் பிரபல சுற்றுலாத் தீவான ஐபிசா அருகே டீசல் ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் கவிழ்ந்து கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கப்பலில் இருந்த மற்ற பணியாளர்கள் மீட்கப்பட்டாலும், அதில் ஏற்றிச் செல்லப்பட்ட டீசல் கடலில் கலக்குமா என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற மெத் எம்ரே என்ற கப்பல், ஸ்பெயினின் அல்ஜெசிராஸ் துறைமுகத்திலிருந்து பார்சிலோனா நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஐபிசா தீவிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் கப்பல் கவிழ்ந்து பகுதியளவில் மூழ்கியது. அந்தக் கப்பலில் சுமார் 7,000 மெட்ரிக் டன் வரை டீசல் இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மேலும் ஆறு பேர் சிறிய காயங்கள் மற்றும் உடல் குளிர்ச்சி பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
விபத்துக்குள்ளான கப்பல் முழுமையாக கடலுக்குள் மூழ்காமல் ஒரு பகுதி நீருக்கு மேலே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலின் நிலைத்தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கப்பலில் உள்ள எரிபொருளை பாதுகாப்பாக அகற்றுவது மற்றும் கப்பலை மீட்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடலில் பெரிய அளவிலான எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கடல் நீரில் சிறிய அளவில் எரிபொருள் படலம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடல்வாழ் உயிரினங்கள், கடல் ஆமைகள், டால்பின்கள் மற்றும் கடற்புல்வெளிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க மீட்புக் கப்பல்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
