நாகப்பட்டினம்: நாகை-இலங்கை இடையே படகு சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படகு சேவை தொடங்கப்பட்டது. 14ஆம் தேதி தொடங்கியது. ஆனால், பல்வேறு காரணங்களால் படகு சேவை சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இலங்கைக்கு கப்பல் சேவையை தொடங்க தனியார் கப்பல் நிறுவனம் முடிவு செய்து, அந்தமானில் இருந்து ‘சிவகங்கை’ என்ற கப்பலை சமீபத்தில் நாகைத்துறைக்கு கொண்டு வந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு நேற்று மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது. நாகை கலெக்டர் ஆகாஷ், ஒய்.செல்வராஜ் எம்.பி. முன்னிலையில், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தனியார் கப்பல் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் சுந்தர்ராஜன் ஆகியோர் கப்பல் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த கப்பலில் 5 இலங்கை தமிழர்கள் உட்பட 44 பயணிகள் பயணம் செய்தனர். நாகையில் இருந்து நேற்று மதியம் 12.05 மணிக்கு புறப்பட்ட கப்பல், மாலை 4 மணிக்கு இலங்கையில் உள்ள கங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. மீண்டும் இன்று (ஆக.17) காலை 10 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு நாகை சென்றடையும்.
வரும் 18ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இரு திசைகளில் இருந்தும் தினமும் இயக்கப்படும். அதன்படி நாகையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கப்பல் மதியம் 12 மணிக்கு இலங்கை சென்றடையும். அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை சென்றடையும். சாதாரண கட்டணம் ரூ.5,000 ஆகவும், பிரீமியம் கட்டணம் ரூ.7,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.