சென்னை: உங்கள் வீட்டில் உள்ள உருளைக்கிழங்கு, கேரட்டை வைத்து அருமையாக தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். வித்தியாசமான இந்த தொக்கை செய்து கொடுத்து குடும்ப உறுப்பினர்களை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – அரை கிலோ, கேரட் – கால் கிலோ, பச்சை மிளகாய் – 5 இஞ்சி- 1 துண்டு, வெந்தயம் – 1 ஸ்பூன், பெருங்காய தூள் – அரைஸ்பூன், புளி – 50 கிராம், நல்லெண்ணெய்-அரை கப் உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கியும், கேரட்டை துருவியும், இஞ்சியைத் தட்டி வைத்து கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்து கொள்ளவும். வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்ய வேண்டும். புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உருளைக் கிழங்கை பொரிக்கவும் .பின் அதில் இஞ்சி, கேரட்டை சேர்க்கவும்.
இதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து புளி கரைசலைக் கொட்டி நன்கு கொதிக்க விடவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து தண்ணீர் வற்றி நன்கு சுருண்டு வரும் வரை வதக்கி இறக்கினால் நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் உருளைக்கிழங்கு கேரட் தொக்கு தயார்.